×

புலிகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் முதுமலையில் 175 வகையான வண்ணத்துப்பூச்சிகள் பதிவு

*அரிதாக எல்லோ ஜேக் சாய்லர் வகையும் பதிவுஊட்டி : முதுமலை புலிகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பில் 175 வகைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் அரிதான எல்லோ ஜேக் சாய்லர் வகையும் பதிவுவானது.நீலகிரி உயிர்சூழல் மண்டலத்தில் பல்வேறு வகையான அரிய விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்கள் உள்ளன. நீலகிரிக்கே உரித்தான நீலகிரியை மட்டுமே வாழ்விடமாக கொண்ட தவளை இனங்கள், பூச்சியினங்கள், அரிய வகை வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள் அதிகளவில் காணப்படுகின்றன. 300 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ளன. காலநிலை மாற்றம், வெப்பமயமாதல் போன்ற இடர்பாடுகளை உடனுடன் காட்ட கூடிய கருவியாக வண்ணத்துப்பூச்சி உள்ளது. 4 நிலைகளில் நன்கு வளர்ச்சியடைந்த வண்ணத்துப்பூச்சி உருவாகிறது. அவ்வாறு உருவாக மரங்கள், தாவரங்களை சார்ந்து இருக்கிறது. அதிக வண்ணத்துப்பூச்சி உருவாகும் போது வனப்பகுதிகள் செழுமையாக உள்ளது என்று அர்த்தம். வனவளம் காரணமாக மழை பொழிவு சீராக இருக்கும். மாயார், பவானி போன்ற முக்கிய ஆறுகள் வற்றாமல் ஓடுவதற்கு காரணம் வன வளம் தான். இதனால் சூழலியல் சங்கிலியில் வண்ணத்துப்பூச்சி முக்கிய இடம் வகிக்கிறது. நீலகிரி மாவட்டத்தை பொருத்த வரை முதுமலை, பர்லியார், கல்லார், மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் வண்ணத்துப்பூச்சி அதிகம் உள்ளது. மழை பொழிவு முந்தைய பிப்ரவரி மாதத்திலும், வடகிழக்கு பருவமழைக்கு முன்பு அக்டோர் மாதத்திலும் வண்ணத்துப்பூச்சி இடப்பெயர்ச்சி ஆகின்றன. இந்நிலையில், 688 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பக உள்மண்டலம், வெளிமண்டல பகுதிகளில் முதல்முறையாக வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணிகள் கடந்த 3 நாட்கள் நடந்தது. வனத்துறை, தி நேச்சர் அன்ட் பட்டர்பிளை சோசைட்டி, டபுள்யு.டபுள்யு.எப்  அமைப்பு ஆகியவை இணைந்து மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, பாண்டிசேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வன ஊழியர்கள் ஆகியோர் அடங்கிய 16 குழுக்கள் இக்கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். இதில், 175 வகை வண்ணத்துப்பூச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது. அதன்படி, ரெட் ஹெலன், காமன் பேண்டேட் பீகாக், மலபார் பேண்டேட் பீகாக், ஸ்பாட்லெஸ் கிரேஸ் எல்லோ, சாக்லேட் அல்பேட்ரோஸ், நீலகிரி டைகர், காமன் செர்ஜியன்ட், எல்லோ ஜேக் சைல்லர், குரூசர், சென்டுரர் ஓக்புளூ, பேண்டேட் ராயல், வேக்ஸ் டார்ட், கன்டிஜிசியஸ் ஸ்விப்ட் உள்ளிட்ட பல்வேறு வகை வண்ணத்து பூச்சிகள் பதிவு செய்யப்பட்டன. இதில், தமிழகத்தில் மிகவும் அரிதாக காணக்கூடிய எல்லோஜேக் சாய்லர் வகை வண்ணத்துப்பூச்சி கார்குடி பகுதியில் பதிவு செய்யப்பட்டது. இதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் மாநில வண்ணத்துப்பூச்சியான தமிழ் ஏமன் வகையும் பதிவு செய்யப்பட்டது. இந்த 175 வகை வண்ணத்துப்பூச்சிகளில் 12 வகை ஸ்வாலோடேய்ல்ஸ் குடும்பத்தையும், 22 வகை வொய்ட் அண்ட் எல்லோ குடும்பத்தையும், 53 பிரஷ் புட்டேட், 48 புளூஸ், 2 மெட்டல்மார்க்ஸ், 38 ஸ்கிப்பர் வகை வண்ணத்துப்பூச்சி குடும்பத்தை சேர்ந்தவையாகும். கணக்கெடுப்பு பணிகளில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் மேற்பார்வையில் தி நேச்சர் அன்ட் பட்டர்பிளை சோசைட்டியை சேர்ந்த பாவேந்தன்,  டபுள்யு.டபுள்யு.எப்., ஒருங்கிணைப்பாளர் பூமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்களை ஆவணப்படுத்துவதன் மூலம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுச்சூழல் வளம் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். மேலும் வண்ணத்துப்பூச்சிகளை பாதுகாத்திட தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க முடியும்’ என்றார்….

The post புலிகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் முதுமலையில் 175 வகையான வண்ணத்துப்பூச்சிகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Tiger ,Reserve ,Mudumalai ,Mudumalai Tiger Reserve ,Dinakaran ,
× RELATED முதுமலையில் பருவ மழைக்கு முந்தைய...